அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அந்நாட்டு அறிவித்து இருக்கிறது. அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்து உள்ளது.
நம்மில் பலருக்கு புதிதாக தொழில் தொடங்குவதற்கான பல யோசனைகள் இருக்கலாம். ஆனால், வேறொரு நிறுவனத்திலோ அரசு பணியிலோ இருப்பதால் அதற்கான நேரமும், பொருளாதாரமும் இல்லாமல் இருந்திருக்கும்.
குடும்ப சூழலை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தொழிலாளியாகவே காலத்தை கடத்திக்கொண்டு இருப்போம். இப்படிதான் நாட்டின் என்னற்ற இளைஞர்களின் தொழில் கனவு சிதைந்து விடுகிறது.
இதெல்லாம் நடக்குமா?
இந்த சூழலில் பணிபுரியும் நிறுவனமோ, அரசோ நாம் தொழில் தொடங்குவதற்காக ஓராண்டு விடுமுறை அளித்தால் எப்படி இருக்கும்? அப்படியே பாதி மாதத்தின் ஊதியத்தை கொடுத்து உதவினால்?.. இதெல்லாம் நடக்குமா என்று நினைக்கலாம். ஆனால், வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுபோன்ற திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்து உள்ளது.
செய்திகாட்டிய யுஏஇ
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அந்நாட்டில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களையும் தொழிலதிபர்களாக மாற்றும் வகையில் அசத்தலான திட்டத்தை கொண்டு வந்து உள்ளது ஐக்கிய அரசு அமீரகம்.
ஊதியத்துடன் கூடிய விடுமுறை
அதன்படி வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு விடுமுறையை அந்நாட்டு அரசு வழங்குகிறது. அரசு துறைகளில் பணிபுரியும் யாரெல்லாம் சொந்த தொழிலை தொடங்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய தொழில்களை தொடங்க திட்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் முன் வைக்கப்பட்டு அந்நாட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாக துபாய் ஆட்சியாளர் சேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம், ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதி மற்றும் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஆகியோர் தெரிவித்து உள்ளார்கள்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட துபாய் ஆட்சியாளர் சேக் முஹம்மது, “இன்று சுய தொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாதி ஊதியமும், வேலை உறுதியுடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த இளைஞர்கள் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
கூடுதல் வாய்ப்புகள்
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறி உள்ளதாவது, “நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல நாங்கள் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்துகிறோம்.” என்றார். இந்த புதிய சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையுடன் பாதி ஊதியம் வழங்கப்படும்.
என்ன சட்டம்?
அதேபோல் அரசின் துறை சார்ந்த தலைவரே ஊழியர்களுக்கான இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார். இந்த விடுமுறையை ஊதியமற்ற விடுமுறை மற்றும் ஆண்டு விடுமுறையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதேபோல் அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், நிறுவனங்களை நடத்துவதற்கும் யுஏஇ அரசு உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.