2014 க்குப் பிந்தைய மோடி ஆட்சி, மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலமும் மாநில அரசாங்கங்களின் கொடூரமான தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மூலமாகவும் மிகவும் கொடூரமான முறையில் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழிவகை செய்துள்ளது.
பிற அனைத்துத் துறைகளையும் போலவே, மோடியின் கார்பொரேட் ஆதரவு, மக்கள் விரோதத் தொழிலாளர் கொள்கைகள், இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தைத் தொடர்ச்சியான பல நாடு தழுவிய பொது மற்றும் பிரிவுசார் வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்தித்துள்ளன.
முதலாளிகளுக்கு நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்கும் தொழில் வணிகத்தை எளிதாகச் செய்யவும், அயல் நாட்டு முதலீடுகளை இன்னும் மிகுதியாக ஈர்க்கவும் தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் அவசியமானவை என்று அரசாங்கம் முன்வைத்துள்ளது.
உண்மையில், சீர்திருத்தங்கள் என்று கூறிக் கொள்ளப்படும் இந்தச் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர் வர்க்கத்தைத் திட்டமிட்ட முறையில் அதிகாரமிழக்கச் செய்யவும், தொழிலாளர் வர்க்கத்தின் பெரும் பகுதியினரை அடிமைத் தளைக்குள் தள்ளிவிடவும், இயற்கை மற்றும் மனித வளங்களை உலக மூலதனத்திற்கு விற்கவும் வழிவகை செய்கின்றன.
திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் மலிவான உழைப்பைக் கொள்ளையடிப்பதற்கு பெரும் கார்பொரேட்டுக்களுக்கு உதவமாட்டா என்று அரசாங்கங்கள் உறுதியளித்துக் கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கம் பல பத்தாண்டுகளாகப் போராடிப் பெற்ற குறைந்தபட்ச உரிமைகளை அரசாங்கங்கள் துரோகத்தனமாகப் பறிக்கின்றன.
பேரழிவு மேலாண்மை மற்றும் பொருளாதாரப் புத்துயிரூட்டல் என்ற போர்வையில் வேலை நிபந்தனைகள், வேலை நேரம், ஊதியம், கூடுதல் நேர வேலை, வேலையிட உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கைவிடும் அதன் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை மோடி அரசாங்கத்துக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் கொரோனாப் பெருந்தொற்று வழங்கியுள்ளது.
இந்தத் தொழிலாளர் கொள்கைகளை எதிர்ப்பதற்கு உள்ள உரிமைகள் கூட மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில தொழிலாளர் நலச் சட்டங்களுக்குத் தற்காலிக விதிவிலக்களிக்கும் உத்திரப் பிரதேச அரசாங்க அவசரச் சட்டம் 2020 பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் 1996; தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923; கொத்தடிமை முறைத் தொழிலாளர் (ஒழிப்புச்) சட்டம் 1976; ஊதியம் அளிக்கும் சட்டம் 1936 இன் பிரிவு 5 (சரியான நேரத்தில் ஊதியம் பெறும் உரிமை); ஆகியவை அந்த மாநிலத்தில் செல்லுபடியாகும்; தொழில் தகராறு தீர்வு, வேலையிடப் பாதுகாப்பு, உடல்நலம், தொழிலாளர்கள் வேலை நிலைமை, தொழிற்சங்கங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பிற 38 தொழிலாளர் சட்டங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகாது.
புதிய தொழிற்சங்கங்களைப் பதிவு செய்ய முடியாது, தொழிலாளர்களின் குறைகளை முறையிடுவதற்கு எந்தப் பொறியமைவும் இருக்காது. மறுக்கப்படும் உரிமைகளில், எதேச் சாதிகாரமாகவும் நியாயமற்ற முறையிலும் தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதற்கு (தொழில் தகறாறு சட்டம் பிரிவுகள் 2 மற்றும் 11 அ வின் கீழ் நிலையாணைகள் சட்டம் 1946) எதிரான பாதுகாப்பும் அடங்கும். (ஊதியம் வழங்கும் சட்டம் 1936) இன் படி ஊதியம், கருணைத் தொகை (கருணைத் தொகை வழங்கல் சட்டம், 1971), கடைகள், வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டவிரோதப் பிடிப்புக்களைத் தடுத்து, வேலைப் பாதுகாப்பு அளிக்கப்படுவதும் அடங்கும்.
உற்பத்தி அலகுகளில் அன்றாட வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தவும் உத்திரப் பிரதேச அரசாங்கம் முயற்சி செய்தது, ஆனால் அந்த முயற்சி வெற்றிப் பெறவில்லை மேலும் போர், தேசிய அவசரநிலை, அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற காலங்களில் நடைமுறைப் படுத்தக் கூடிய தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழான அதிகாரங்களை அந்த அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியது.
“அரசியல் சட்டத்தின் பிரிவு 23 இலிருந்து தோன்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது கட்டாயம் என்பதையும், குறைந்தபட்ச ஊதியம் வழங்காமல் இருப்பது கட்டாய வேலை வாங்குவதற்குச் சமம் என்பதை இந்திய உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. கண்ணியமான, பாதுகாப்பான, வேலை நிலைமைகளை அளிக்கும் கடமையும் பிரிவு 21 இன் கீழ் கண்ணீயத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கமயமாக்கல் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமையும் கூட பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைகள் (ICESR) தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் அடங்கும். ஏறத்தாழ நிலவும் தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் ஒழிப்பது என்பது இந்த அரசியல் சட்டம் மற்றும் கட்டாய மனித உரிமைகள் ஆகியவற்றைக் கைவிடுவதற்குச் சமமாகும்” என்று நீதித்துறை அறிவியல்களுக்கான மேற்கு வங்காள தேசியப் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சவுரவ் பட்டாச்சார்ஜி சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்திலும் சூழல் அப்படி ஒன்றும் வேறுமாதிரி இல்லை. தொழில்துறையின் பதினொரு பிரிவுகளுக்கு (ஜவுளி, தோல், சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, மின்சாரப் பொருட்கள், சர்க்கரை, மின்சாரம், பொது மோட்டார் வாகனப் போக்குவரத்து, மோட்டார் வாகனங்கள்உள்ளிட்ட பொறியியல் போன்றவை) மத்தியப் பிரதேசத் தொழில்துறை உறவுகள் சட்டம் 1961 இலிருந்து விதிவிலக்களிக்கப்படும்.
இந்த விதிவிலக்குகளின் காரணமாக, “வட்டார அளவில் ஒரு குறிப்பிட்ட தொழில்துறையில் தொழிலாளர்களின் வேலை நிபந்தனைகள் தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பது அல்லது விவாதங்களில் ஈடுபடுவதில் ஒரு பேரம் பேசும் முகவராகச் செயல்படுவதற்கான” அங்கீகாரம் தொழிற்சங்கத்துக்கு இருக்காது.
சட்டரீதியான ஆய்வுக்கும் அரசாங்கம் முடிவு கட்டியுள்ளது, மூன்று மாதங்களுக்கு எந்தத் தொழிற்சாலை ஆய்வும் இருக்காது, 50 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனகளுக்கு எந்த ஆய்வும் இருக்காது, மூன்றாம் தரப்பு ஆய்வும் இருக்காது.
புதிய உற்பத்தி அலகுகளுக்கு அடுத்த 1000 நாட்களுக்கு தொழில்துறைத் தகராறுச் சட்டம் 1947 இன் முக்கிய பிரிவுகளையும் மாநில அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது, இது தொழிலாளர்களின் வேலையிழப்பு ஒழுங்குவிதிகளை எளிதாக்கும். இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையைத் தொழிலாளர்கள் இழப்பார்கள். தொழில்துறை தகராறுகள் சட்டத்தில் தொழில்துறை தகராறுகளை தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு அனுப்பிவைக்கும் விதிமுறை உள்ளது.
இது மத்தியப் பிரதேசத்தில் இனிப் பொருந்தாது. இத்தகைய சூழலில், தொழிலாளர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். இது தொழிலாளர்கள் உரிமைகளின் மீதான அடக்கு முறையாகும் என்று தொழிலாளர் பொருளியலாளர் கே.ஆர்.சியாம் சுந்தர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: உத்தரப்பிரதேசத்தில் தொழிலாளர் சட்டங்கள் ஏறத்தாழ முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும், மத்தியப் பிரதேசத்தில் குறிப்பிட்ட ஆனால் தொழிலாளர்களின் மிகவும் முக்கியமான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும் தொழிலாளர் சந்தையில் பெரும் அராஜகத்துக்கு இட்டுச் செல்லும். இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்குப் பயங்கரமானவையாக இருக்கும்.”
உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாதிரியைப் பின்பற்றி, “குறைந்தபட்சம் 1200 நாட்கள் அல்லது 1200 வேலை நாட்களுக்குச் செயல்பட முன்வரும் புதிய திட்டங்கள் அனைத்திற்கும், தொழிலாளர் சட்டங்களில் மூன்றைத் தவிர அனைத்து விதிமுறைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படும், சீனாவிலிருந்து இடம் பெயர விரும்பும் உலகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு 33,000 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் அடையாளம் கண்டு வைத்திருக்கிறது” என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.
விதிவிலக்காக அறிவிக்கப்பட்டுள்ள மூன்று சட்டங்களில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழில்துறை பாதுகாப்பு விதிகள் மற்றும் தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் ஆகியவை ஆகும். இந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்துறை விபத்து நேர்வுகளில் குறைந்தபட்ச இழப்பீடு தொடர்பானவையாகும்.
குஜராத் அரசாங்கம் தொழிலாளர் ஆய்வோ, அரசாங்கத் தலையீடோ இல்லாமல், மாநிலத்தில் உள்ள தொழிலாளர் சங்கங்களின் அதிகாரங்களை மோசமாகத் தடைசெய்துவிட்டு, தொழிலாளர்களை தங்கள் விருப்பம் போல் வேலைக்கு எடுத்துக் கொள்ளவோ வேலையை விட்டு நீக்கவோ முதலாளிகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் பா.ஜ.க. அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் பஞ்சாபில் காங்கிரசின் தற்போதைய ஆட்சியும் பா.ஜ.க.வின் அடித்தடத்தைப் பின்பற்றுகிறது. இந்த ஆண்டு ஏப்ரலில், நாளொன்றுக்கு 8 மணி நேரமாகவும் வாரம் ஒன்றுக்கு 48 மணி நேரமாகவும் இருந்த வேலை நேரத்தை நாளொன்றுக்கு 12 மணி நேரமாகவும், வாரத்துக்கு 72 மணிநேரமாகவும் அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலைகள் சட்டங்கள் திருத்தப்பட்டன.
2020 ஜனவரியில் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் 1970, தொழிற்சாலைகள் சட்டம் 1948, தொழில் தகராறு சட்டம் 1947 ஆகிவற்றில் திருத்தங்கள் செய்வதற்கான அவசரச் சட்டங்களை முன்மொழிந்தார்.
இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, ஜார்கண்ட், அசாம், ஹரியானா, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் பா.ஜ.க. அரசுகள் செய்த அதே திருத்தங்களை – வணிகச் சார்பு தொழிலாளர் சட்டத் திருத்தங்களை – செய்துள்ளார், இவை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களை முன்னெப்போதையும் விடப் பாதுகாப்பற்றதாகச் செய்துள்ளன.
வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம் மேற்கொண்ட நான்கு மாநிலங்கள் – இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசம் – குறித்த ஓர் ஆய்வு, இந்தச் சட்டத் திருத்தங்களால் பெரும் முதலீடுகளோ ஈர்க்கப்படவோ, தொழில்மயமாக்கலை அதிகரிக்கச் செய்யவோ, வேலைவாய்ப்பை உருவாக்கவோ இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளது என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுவது தவறாகிவிடாது.
தொழிலாளர் சந்தை வளர்ச்சியில் நெகிழ்வுத் தன்மை வேலைவாய்ப்பு வளர்ச்சியில் எந்தக் குறிப்பிடத்தக்க செல்வாக்கையும் செலுத்தவில்லை என்பதைப் பின்னோக்கிப் பார்க்கும் இந்திய பகுப்பாய்வுகள் அனுபவம் காட்டியுள்ளது.
2014 இல் பின்னோக்கிப் பார்த்தோமானால், வசுந்தரா ராஜி தலைமையிலான இராஜஸ்தான் மாநில அமைச்சரவை, தொழில்துறை தகராறுகள் சட்டம் 1947, தொழிர்சாலைகள் சட்டம் 1948, ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் 1970, மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள் சட்டம் 1961 ஆகிய நான்கு தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்தது.
முதலாவதாக, தொழில்துறை தகறாறுகள் சட்டத் திருத்தம் அரசாங்கத்தின் முன்கூட்டிய அனுமதி இல்லாமலேயே 300 தொழிலாளர்கள் வரை (முன்பு இது 100 தொழிலாளர்கள் என்று இருந்தது) வேலையை விட்டு வெளியேற்றுவதற்கு அனுமதித்தது. 86 விழுக்காடு தொழில்துறைகள் 300 க்கும் குறைவான தொழிலாளர்களையே வேலைக்கு வைத்துள்ளன என்பதைப் புள்ளிவிவரம் காட்டுகிறது, இந்த விதிமுறையைப் பயன்படுத்தி தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு இப்போது அவற்றுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளது.
இந்த மாற்றங்கள் தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதையும் கடினமாக்குகின்றன – ஒரு தொழிற்சாலையில் ஒரு தொழிற்சங்கம் அமைப்பதற்கு 15 விழுக்காடு தொழிலாளர்களுக்குப் பதிலாக, இப்போது 30 விழுக்காடு தொழிலாளர்கள் ஒன்று சேர வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் உரிமம் இல்லாமலேயே 49 விழுக்காட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களை முதலாளி நியமித்துக் கொள்ளலாம்.
பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு கூற்றுப்படி, “தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்கள் மின்சாரம் இல்லாமல் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வரம்பு 20 இலிருந்து 40 ஆகவும் மின்சாரத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வர்மபு 10 இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட முன்மொழிகிறது.
இந்தச் சட்டமீறல் குறித்து முதலாளி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மாநில அரசாங்கத்தின் எழுத்துபூர்வமான முன் அனுமதியின்றி நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மேற்படி முதலாளியின் குற்றத்தில் சமரசம் செய்துகொள்ளும் விதிமுறையும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.”
கடந்த ஆறு ஆண்டுகளில், இதே போன்ற சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கும் முதலாளிகளுக்கு விதிகளில் தளர்வினை அளிப்பதற்கும் அரியானா, மத்தியப்பிரதேசம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இராஜஸ்தான் வழிகாட்டியுள்ளது.
மேற்கு வங்காள அரசாங்கம் இந்த மூன்று மாத கால ஊரடங்களில் தொழிலாளர் சட்டத்தில் எந்த மாறுதல்களையும் அறிவிக்கவில்லை என்றாலும், தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான சுரண்டல் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் மௌனத்தைக் கடைபிடித்து வருகிறது.
ஹௌரா தொழில்துறைப் பகுதியில் ஓர் எடுத்துக்காட்டு உண்மையில் என்ன் நடக்கிறது என்பதைச் சித்தரிக்கிறது. 15 விழுக்காடு தொழிலாளர்களுடன் சணல் ஆலைகளில் வேலையைத் தொடங்கலாம் என்று மாநில அரசாங்கம் அனுமதியளித்ததும், ஆலை நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களிடம் 12 மணிநேர வேலையை முன்மொழிந்தன. இருப்பினும், ஆச்சரியப்படத்தக்க வகையில், பவுரியா சணல் ஆலையில் ஒரு தொழிற்சங்கமும், பிரேம்சந்த் சணல் ஆலையில் தற்காலிகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கமும் தவிர எந்த ஒரு தொழிற்சங்கமும் இதை எதிர்க்கவில்லை.
தொழிலாளர்கள் ஆத்திரமடைந்து அனைத்து ஆலை வளாகங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளோஸ்டர் சணல் ஆலை, பவுரியா சணல் ஆலை மற்றும் டெல்டா சணல் ஆலை ஆகியவை 12 மணிநேர வேலையில் வேலையைத் தொடங்கியிருந்தாலும், முதல் நாளிலயே முதல் முறைமாற்றுப் பணி முடிவதற்கு முன்பே பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன, அதனால் மூன்று ஆலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆலைத் தொழிலாளர்களிடம் 12 மணி நேர வேலை நேரத்தை முன்வைப்பதற்கு எந்தத் தொழிற்சங்கத்துக்கும் துணிவு வரவில்லை. ஹௌரா பகுதியில் உள்ள அனைத்துச் சணல் ஆலைகளிலும் (ஒருவாரம் மூடியிருந்த பிறகு) எட்டு மணிநேர வேலை நேர அடிப்படையில் 15 விழுக்காடுத் தொழிலாளர்களுடன் வேலை தொடங்கப்பட்டது.
இருப்பினும், பவுரியா சணல் ஆலையின் இறுதிப்பணித் துறை அந்தவாரம் முழுவதுமே திறந்திருந்தது, தொழிலாளர்கள், மாநில அரசாங்கத்தின் குறைந்தபட்சக் கூலி நாளொன்றுக்கு ரூ.353/- ஆக இருந்தபோதிலும் ரூ.300/- நாள் கூலிக்கு 12-13 மணிநேரம் உழைப்பைச் செலுத்தினர்.
ஒரு சணல் ஆலையில், 24 மணிநேரமும், மூன்று முறைமாற்ற அடிப்படையில் வேலை நடந்துவரும். முதல் ஷிஃப்ட் முறைமாற்று காலை 6 மணியிலிருந்து 11 மணி வரையிலும், பின்பு மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும், இரண்டாவது ஷிஃப்ட், காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணியி வரையிலும், பின்பு மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலும், மூன்றாவது ஷிஃப்ட் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரையிலும் இடைவேளையின்றி நடக்கும்.
மூன்றாவது ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு மட்டும் இரண்டு சிற்றுண்டி இடைவேளைகள் அனுமதிக்கப்படும், முதல் ஷிஃப்ட் மற்றும் இரண்டாவது ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு முறையே காலை 6 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலும் சிற்றுண்டி இடைவேளைகள் அனுமதிக்கப்படும்.
தொழிலாளர்கள் தங்களுடைய சிற்றுண்டி இடைவேளைகளில் சேர்ந்தே வெளியில் செல்வது வழக்கம், ஆனால் இப்போது, கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, ஒன்றாகச் சேர்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை, இதனால் இயந்திரம் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்க முடிந்தது. ஷிஃப்டுகளுக்கு இடையில் நேரம் அளிப்பதற்கு அதிகாரிகளும் எதிராக இருந்தார்கள், ஆனால் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, அத்தகைய ஏற்பாட்டைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
அப்போதிருந்து ஆலைகள் 7-8 மணி நேரம் தொடர்ச்சியாக இயங்கிக் கொன்டிருக்கின்றன, 7 மணி நேர ஷிஃப்ட் என்பது கைவிடப்பட்டு, வாரம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் கைவிடப்பட்டது. இந்த ஏற்பாட்டின்படி, தொழிலாளர்களின் வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு உரிமை கைவிட்டுப் போனது. 100 விழுக்காடு தொழிலாளர்கள் வரும்வரை வளாக உணவகங்கள் மூடியேயிருக்கும்.
இந்த நேரத்தில் சங்குகள் ஒலிக்காது, தொழிலாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இது வேலை நேரத்தில் ஏதாவது விபத்தோ அல்லது பாதிப்போ ஏற்படுமானால் அதற்குப் பொறுப்பேற்பதைத் தவிர்ப்பதற்கு ஆலை நிர்வாகங்களுக்கு வசதியாக இருந்தது.
(ஓவ்வொரு ஷிஃப்ட் தொடங்கும் போதும் முடியும் போதும் ஆலை வளாகங்களில் சங்கு ஒலிக்கும், மேலும் தொழிலாளர்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும் போதும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுச் செல்வார்கள், அப்போதுதான் ஒரு ஆலை அதிகாரபூர்வமாக இயங்குகிறது என்று பொருள். இந்தக் காலகட்டத்தில், விபத்தோ காயமோ ஏற்பட்டால் ஆலை அதிகாரிகள் தாம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் கூடுதலாக, ஆலை அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போதுமான வேலை கொடுக்க முடியவில்லை என்றால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அந்தக் காலகட்டத்திற்கு வேலையிழப்பு ஊதியம் பெறுவதற்கு உரிமை உண்டு).
புதிய விதிகளின்படி, மூன்றாவது ஷிஃப்டிலும் தொழிலாளர்களின் சிற்றுண்டி இடைவேளை 40 நிமிடங்களிலிருந்து 20 நிமிடமாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் பவுடியா சணல் ஆலைத் தொழிலாளர்களின் விரிவான எதிர்ப்புக்குப் பிறகு, குளோஸ்டர் மற்றும் லாட்லோ சணல் ஆலைகளில், ஆலை நிர்வாகங்கள் தொடர்ச்சியான ஷிஃப்டுகள் வேலையைத் திரும்பப் பெறவும், சங்கொலி மற்றும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் பெறுதல் ஆகியவை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் பட்டன. இருப்பினும், டெல்டா மற்றும் பிரேம்சந்த் சணல் ஆலைகளில் இன்னும் இடைவேளையில்லாத தொடர்ச்சியான ஷிஃப்டுகளில் வேலை நடக்கிறது.
ஆலைகள் 100 விழுக்காடு தொழிலாளர்களுடன் வேலையை மீண்டும் தொடரும்போது, பல புதிய தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டு, அவர்களுக்கு நாளொன்றுக்கு வெறும் ரூ.200/- / ரூ100/- மட்டும் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அரசுக் காப்பீடு அல்லது தொழிலாளர் வைப்பு நிதி அளிக்கப்படுவதில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை. [ஓர் ஆலையில் மூன்று வகைத் தொழிலாளர்கல் இருக்கிறார்கள்.
நிரந்தரத் தொழிலாளர்கள் (நிரந்தர அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள் இருக்கிறார்கள், ஆனால் நிரந்தரத் தொழிலாளர்கள் மிகவும் சொற்பமாகவே இருக்கிறார்கள்), ஆலை ஊழியர்கள் (அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஆலையின் ஊதியப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள், ஒப்பீட்டளவில் நிலையாக இருப்பார்கள், காப்பீடு மற்றும் வைப்புத் தொகை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவர்களுக்கு உண்டு.) தற்காலிகத் தொழிலாளர்கள் (தனியார் தொழிலாளர் ஒப்பந்தக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள், அவர்கள் வேலை செய்தால் கூலி, வேலை இல்லை என்றால் கூலி இல்லை, அவர்களுக்கு எந்த வேலைப் பாதுகாப்பும் இல்லை).]
அனைத்து நிறுவனமயப்பட்ட தொழிற்சங்கங்களும் இந்தப் பிரச்சனைகளை வசதியாகப் புறக்கணித்துள்ளதும், மாநில அரசாங்கமும் இந்தத் தொழிலாளர்களின் துயரங்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதும் வியப்பாக இருக்கிறது. பிரேம்சந்த் சணல் ஆலையின் தொழிலாளர்கள் பிரதிம்ஹிதிகள் குழு உளுபேரியா தொழிலாளர் ஆணையத்திடம் சமர்ப்பித்த முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், வேறு எந்த ஒரு தொழிற்சங்கமும் இது தொடர்பாக எந்த முறையீட்டையும் செய்யவில்லை.
சர்வதேச அரங்கில் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த நெருக்கடியின் ஒரு பகுதியாக அதிகரித்துக் கொண்டே செல்லும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஆளும் வர்க்கத்தை எப்போதையும் விட மூர்க்கத்தனமாக மாற்றியுள்ளன.
இந்த ஊரடங்கலின் போது, மத்திய அல்லது மாநில அரசாங்கங்கள் (நிறங்கள்/ பதாகைகள் எதுவானாலும்) கொண்டு வரும் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் மீண்டும் ஒருமுறை அவற்றின் வர்க்கப் பண்பைக் காட்டுகின்றன. இருந்தபோதும், தொழிலாளர்கள் இன்று தன்னெழுச்சியான போராட்டங்களில் பங்கேற்பதும், நிறுவனமயமாகிவிட்ட தொழிற்சங்கங்களின் தலைமையின் மீதுள்ள மாயைகளை விட்டொழிப்பதும் அதிகரித்து வருகிறது.