எட்டு மணி நேர வேலை என்பது பெருத்த சவாலுக்கு உட்பட்டிருக்கும் தருணம் இது. 137 ஆண்டுகளுக்கு முன்னர் (1886), இதே நாளில் எட்டு மணி நேர வேலை கேட்டுக் கிளர்ந்து எழுந்தது போராட்டம். அன்று தொடங்கி, படிப்படியாகத் தொழிலும் தொழிலாளர் வர்க்கமும் வளர்ந்தன.
‘தொழிலாளி’ என்றாலே நிரந்தர வேலை, கௌரவமான ஊதியம், பணிப் பாதுகாப்பு ஆகியவை சார்ந்த நம்பிக்கை அல்லது கற்பிதங்கள்கூட உருவாயின. 1919இல் சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் (ILO) தொடங்கப்பட்டது. உழைக்கும் நேரத்தை முறைப்படுத்துவது தொடங்கி, சமூக நீதியை நிலைநாட்டுவதுவரை சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் முக்கியப் பங்காற்றியது. 1944இல் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் நடைபெற்ற ஐஎல்ஓ சர்வதேச மாநாடு, தொழிலாளர் நலம் பேணுவதில் அடிப்படை விதிகளை உறுதிப்படுத்தியது.
அதன் பிறகான இந்த 80 ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, பனிப்போரின் முடிவு, இனப் பாகுபாடுகளுக்குச் சட்டரீதியான முடிவு, கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் மறைவு, பெர்லின் சுவர் தகர்ப்பு என என்னென்னவோ நடந்தேறிவிட்டன. இனப் படுகொலைகள், பயங்கரவாதம், இனவாதம், வகுப்புவாதம், வெறுப்பு அரசியல் எனப் பல நெருக்கடிகளும் அதிகரித்துள்ளன.
எது வளர்ச்சி? இவற்றின் ஊடாகவே, உலகமயமாக்கல் வழியாக வளர்ச்சியும் நடந்தேறிவருகிறது. எட்டு வழிச் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், பிரமிக்க வைக்கும் கட்டிடங்கள், பிரம்மாண்டமான பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில்நுட்ப-தொலைத்தொடர்பு வசதிகள் எனத் தொழிலும் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டுவருகின்றன.