கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அனல்மின் நிலையம் – I மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் – II மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி (Neyveli New Thernal Power Project) என ஐந்து அனல்மின் நிலையங்கள் இங்கு செயல்பட்டுவருகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவை தவிர்த்து சமீபத்தில் புதிய அனல்மின் நிலையம் கட்டப்பட்டு, அங்கும் மின் உற்பத்தி நடைபெற்றுவருகிறது. இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, சுமார் 100 டன் அளவுக்கு மேல் பங்கரில் குவித்துவைக்கப்பட்டிருக்கும். எதிர்பாராதவிதமாக அந்த நிலக்கரி திடீரென தீப்பிடித்தது. அப்போது பாய்லரில் தீயின் அளவு அதிகரித்திருக்கிறது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளி ஒருவர் அதில் படுகாயமடைந்து பாய்லரிலிருந்து கீழே குதித்தார். மேலும் அங்கு பணியிலிருந்த நான்கு தொழிலாளிகளுக்கும் அதேபோல் படுகாயம் ஏற்பட்டது. இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற நான்கு பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
படுகாயமடைந்த தொழிலாளர்கள் சுரேஷ், செல்வராஜ், திருநாவுக்கரசு, செந்தில்குமார், சுரேஷ் ஆகிய ஐந்து பேரும் மீட்கப்பட்டு என்.எல்.சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திருநாவுக்கரசு என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்ற நான்கு தொழிலாளர்களும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து என்.எல்.சி-யின் உயரதிகாரிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வு செய்துவருகின்றனர்.
புதிதாகத் தொடங்கப்பட்ட நெய்வேலி தெர்மல் பவர் ஸ்டேஷனில், தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய இடங்களில் போதிய மின் தடுப்பு சாதனங்கள் இல்லாத காரணத்தாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர் ஊழியர்கள்.