சங்கு குளிக்கும் தொழிலில் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஷ் புறம் கடற்கரை பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களாக வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை சங்கு குளிக்கும் தொழிலில் சிலர் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து தூத்துக்குடி சங்கு குளி மீனவர்கள் நேற்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.