வேலூர்: வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மேலாளர் அலுவலகம் முன்பாக சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சுமை தூக்கும் தொழிலாளர்களின் சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும். அரிசி ஆலைகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை கையாளுவதற்கு ஏற்ப ஆட்களை நியமிக்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.