பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று சேலத்தில் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த, 2021 மார்ச்சில் முடிந்து விட்டதால், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இதற்காக, 75 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
ஒப்பந்தம் முடிந்து, 18 மாதம் ஆகியும், இன்னும், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால், விசைத்தறி தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில், கடந்த ஜூலை, 29ம் தேதி, சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் தொழிற்சங்கத்தினர் மட்டும் பங்கேற்றதால், அன்று பேச்சுவார்த்தை நடக்கவில்லை. மீண்டும் எப்போது பேச்சுவார்த்தை நடத்தி, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பில், விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிற்சங்க செயலாளர் அசோகன் கூறுகையில், ”பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை, மீண்டும் இன்று சேலம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடக்கிறது,” என்றார்.