வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வள்ளலாரில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (பி.எப். அலுவலகம்) செயல்பட்டு வருகிறது. இங்கு ஆம்பூரை சேர்ந்த தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள், தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகையிடப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ரவி, கருணாகரன் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தொழிலாளர்கள் சுமார் 150 பேர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். சங்க முக்கிய நிர்வாகிகள் மட்டும் அலுவலகம் உள்ளே சென்று கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதன்பேரில் சிலர் மட்டும் உள்ளே சென்று வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ரிதுராஜ்மேதியை சந்தித்து பேசினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ஆம்பூர் பெரியாங்குப்பத்தில் ஷூ தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் சுமார் 800 பேர் பணியாற்றினோம். கடந்த 2017-ம் ஆண்டு இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் எங்களுக்கு சேரவேண்டிய பி.எப். பணம் வந்து சேரவில்லை. பணம் பெற சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைத்தோம். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் எங்களுக்கு சேரவேண்டிய சுமார் ரூ.10 கோடியை நிறுவனத்தினர் பி.எப். நிர்வாகத்திடம் வழங்கி உள்ளனர். அவர்கள் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர தாமதப்படுத்தினர்.
இந்தநிலையில் நாங்கள் இங்கு வந்து உடனடியாக பணம் வழங்க முறையிட்டுள்ளோம். அவர்கள் 4 வாரத்தில் பணத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.