மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா ஆஜராகி, வாதங்களை வைத்தார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் நாட்டின் பல்வேறு சாலைகளில் சொந்த ஊர்களுக்கு, பல நாட்களாக நடந்தே பயணம் மேற்கொண்டுள்ளனர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். இந்நிலையில் மத்திய அரசு, அவர்களுக்கு உரிய உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசித் தேவைகளைக் கொடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது என்று சொல்லிவிட்டது.
அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்னும் வழக்கறிஞரால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தனது மனுவைத் தாக்கல் செய்து வாதாடிய ஸ்ரீவஸ்தவா, சமீபத்தில் 16 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் ஏறி இறந்ததையும் சுட்டிக்காட்டினார்.
வாதங்களைக் கேட்டுக் கொண்ட உச்ச நீதிமன்றம், “மக்கள் நடந்து செல்கிறார்கள். அவர்களை எப்படி எங்களால் நிறுத்த முடியும். இந்த நீதிமன்றமானது, சாலைகளில் நடந்து செல்பவர்களை கண்காணிக்க வேண்டும் என்பது மிகவும் சவாலானது. இது குறித்து மாநிலங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். செய்தித்தாள்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில்தான் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்று குற்றம் சாட்டியது.
மேலும், “அனைத்து வழக்கறிஞர்களும் செய்தித்தாள்களில் வரும் தகவல்களைப் படித்துவிட்டு வல்லுநர்கள் போல மாறிவிடுகின்றனர். செய்தித் தாள் தகவலின் அடிப்படையில் இந்த நீதிமன்றம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இந்த விவகாரம் குறித்து ஏன் நீதிமன்றம் கேட்கவோ, உத்தரவிடவோ வேண்டும். மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா ஆஜராகி, வாதங்களை வைத்தார்.
அவர், “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இந்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அவர்களின் போக்குவரத்துக்கு ஆகும் மொத்த செலவுகளையும் ஏற்றுள்ளது.
சிலர் அரசின் போக்குவரத்துக்காக காத்திருக்காமல் தங்கள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், அனைவருக்கும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வாய்ப்பு கொடுக்கப்படும்,” என்று வழக்கு விசாரணையின்போது வாதங்களை அடுக்கினார்.
ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். பொதுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால், வேறு வழியின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்தனர். லாரி, ஆட்டோ, சைக்கிள் நடந்தே என பயணத்தை ஆரம்பித்தனர். இதில் பலர் ஊரைச் சென்றடையும் முன்னரே பசி, உடல் சோர்வு அல்லது விபத்து காரணமாக உயிரைத் துறந்துள்ளனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை நிலையைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சகம், “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலை அல்லது ரயில் பாதைகளில் நடப்பதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உறைவிடத்தை அரசுகள் செய்து தர வேண்டும். அவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று வழிகாட்டியுள்ளது.