தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கேம்பா நிதி உள்ளிட்ட சிறப்பு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
கொரோனா நிவாரணமான, பிரதமர் மோடி அறிவித்திருந்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரச் சலுகை குறித்த விவரங்களை நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார். சிறு குறு தொழில் துறையினருக்குப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் சிறப்புப் பொருளாதாரச் சலுகையின் அடுத்த கட்ட அம்சங்களை இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் கீழ்க்காணும் அம்சங்களை வெளியிட்டார்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது குறைந்தபட்ச ஊதியச் சட்டமானது 30 சதவீதத் தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. பகுதிகளுக்கு ஏற்றவாறு ஊதியத்தில் வேறுபாடு காணப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவிலான ஊதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய நிர்ணய முறை எளிதாக்கப்பட்டு அதிலுள்ள இடர்பாடுகள் களையப்பட்டுள்ளன. அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலைக்கான ஏற்புக் கடிதம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து தொழில்களும் அமைப்பு சார் துறைக்குள் வரும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை சுகாதாரப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அனைத்துத் துறைகளிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
கேம்பா நிதி (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA) funds) திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். காடு வளர்ப்பு, தோட்டங்கள் உள்ளிட்ட தொழில்களில் பழங்குடியினர், ஆதிவாசியினருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக ரூ.6,000 கோடி மதிப்புள்ள முன்மொழிதல்கள் அரசுக்கு வந்துள்ளன. பருவமழைக்காலம் வருவதால் இத்திட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும்.
இது தவிர, இடம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தார்.