டெல்லி: குஜராத் உள்ளிட்ட, பாஜக ஆளும் மாநில அரசுகள் உட்பட பல மாநிலங்களில் ஆளும் அரசுகள், பணியாளர்களுக்கான வேலை நேரத்தை அதிகரிக்க எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, மே 20ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது பாரதிய மஸ்தூர் சங்கம். இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவு இயக்கம் என்பது கவனிக்கத்தக்கது.
பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க சுமார் இரண்டு மாதங்களாக லாக்டவுன் நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து நிறுவனங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஊரடங்கு உத்தரவு, மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில், உற்பத்தியை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களின் பணி நேரத்தை தினமும் 8 மணிநேரம் என்பதிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி பல மாநிலங்கள் முடிவெடுத்துள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்கள் பாஜக ஆளும் மத்திய பிரதேசம், குஜராத், கோவா, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் புதுச்சேரி, ராஜஸ்தான், அக்கூட்டணி ஆட்சி நடத்தும் மகாராஷ்டிரா, பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தக்கூடிய ஒடிசா ஆகிய மாநிலங்களில் 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், பாரதிய மஸ்தூர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வரலாற்றில் இல்லை :
அந்த அமைப்பின் தலைவர் விர்ஜேஜ் உபாத்யாய், வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இதுபோல பணி நேரத்தை நீட்டிப்பது தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரானது, மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல். தொழிலாளர்களை கிணற்றில் பிடித்து தள்ளுவதற்கு சமமானது இந்த நடவடிக்கை. இது போன்ற நடவடிக்கை வரலாற்றில் கேள்விப்பட்டிராத ஒன்று. ஜனநாயகம் இல்லாத நாடுகளில் கூட இப்படியான நடவடிக்கை கிடையாது, என்று அந்த அறிக்கையில் அவர் சாடியுள்ளார்.
சட்டங்கள் எங்கே :
இந்த அமைப்பின் தேசிய தலைவர் சாஜி நாராயணன் இதுபற்றி கூறுகையில், புதிதாக முதலீடுகள் மற்றும் தொழில்கள் வருவதற்கு நாங்கள் ஒத்துழைப்போம். ஆனால் தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதற்கு விடமாட்டோம். 40 வகையான மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் மாநில அரசின் இது தொடர்பான சட்டங்கள் தூக்கி வீசப்பட்டு, அவசர சட்டம் மூலம், தொழிலாளர் பணி நேரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சில சட்டங்கள் :
வெறுமனே 3 அல்லது 4 சட்டங்கள் மட்டும்தான் எஞ்சியுள்ளன. இதை வைத்துப் பார்த்தால் தொழிலாளர்களுக்கு என்று இயற்றப்பட்ட எந்த சட்டமும் தற்போது நடைமுறையில் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மாநிலங்களின் நடவடிக்கை என்பது தொழிலாளர் விரோதப் போக்கு உடையது. எனவே நாங்கள் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.