ஐதராபாத்: சம்பள உயர்வு கோரி போராடி வந்த தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர். திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வழங்க வேண்டிய சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. இதையடுத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் ஆந்திரா, தெலங்கானாவில் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.
தமிழ் படங்களில் பெரும்பாலான படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில்தான் நடந்து வருகிறது. இதனால் தமிழ் படங்களும் பாதிக்கப்பட்டன. அத்துடன் 25 தெலுங்கு படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர், திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு தெலங்கானா அரசு அழைத்தது. அதன்படி அமைச்சர் சீனிவாஸ் யாதவ், இரு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களுக்கு 45 சதவீதம் சம்பள உயர்வு வேண்டும் என தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கொரோனா காலகட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதிலிருந்து தற்போதுதான் மீண்டு வருவதாகவும் தயாரிப்பாளர்கள் கூறினர். அதனால் உடனே 45 சதவீதம் உயர்வை அமல்படுத்த முடியாது. ஆனால் சம்பள உயர்வை உடனே அமலாக்கிவிடுகிறோம் என உறுதி தந்தனர். இதையடுத்து இரு தரப்பும் சுமூகமாக பிரச்னையை தீர்த்துக்கொண்டனர். இதையடுத்து தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் நேற்று முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.