சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்டப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதற்கு மண்பாண்டத் தொழிலாளர்கள், வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.
மானாமதுரையில் தயாராகும் மண்பாண்டப் பொருட்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. மண்பாண்டத் தொழிலில் மானாமதுரை குலாலர் தெருவைச் சேர்ந்த 325 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மண் பானை, அக்னிச் சட்டி, அகல் விளக்கு, கலைப்பொருட்கள், அடுப்புகள், சுவாமி சிலைகள், சமையல் சட்டிகள், கூஜாக்கள், ஜாடிகள், இசைக்கருவியான கடம் போன்ற 50-க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. மண்பாண்டப் பொருட்களுக்கு தேவையான மண்ணை, அங்குள்ள நீர்நிலைகளில் இருந்தே எடுக்கின்றனர்.
இந்த மண்ணின் தனித்தன்மையால் மண்பாண்ட பொருட்கள் உறுதித் தன்மையுடன் உள்ளன. இத்தகைய சிறப்பு பெற்ற மானாமதுரை மண்பாண்டப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு, மானாமதுரை மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு சென்னை புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பித்தனர். அதற்கு தேவையான ஆவணங்களை அரசு வழக்கறிஞர் சஞ்சய்காந்தி சமர்ப்பித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மானாமதுரை பகுதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக மண்பாண்டப் பொருட்களை தயாரித்து வருகின்றனர். மானாமதுரை மண்பாண்டப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியது தொடர்பாக கடந்த ஆண்டு நவ.30-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. எனினும் 4 மாதங்கள் முடிந்தபிறகே அங்கீகாரம் கிடைக்கும். அதனடிப்படையில் மார்ச் 31-ம் தேதி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும் இசைக்கருவியான மானாமதுரை கடத்துக்கும் விண்ணப்பித்தோம். இந்த கடத்தை ஒரு குடும்பம் மட்டுமே தயாரிக்கிறது என்பதால் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அக்குடும்பத்தினர் அமைப்பை ஏற்படுத்தி பதிவு செய்தால் மானாமதுரை கடத்துக்கும் புவிசார் குறியீடு கிடைக்க முயற்சி எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளர் மற்றும் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத் தலைவர் லெட்சுமணன் கூறுகையில், மானாமதுரை மண்பாண்டப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.
எங்களது பொருட்களின் மதிப்பு உயர்வதோடு, வேறு பகுதிகளில் எங்களது பெயரில் மண்பாண்டப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் உயரும், என்றார்.