கேரள மாநிலம், திருச்சூர் அருகே கடந்த சில நாட்களாக பாலப்பள்ளி, பில்லாமோடு,
புதுக்கடை எஸ்டேட், நாதம்படம் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் 40
காட்டு யானைகள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் சில வாரங்களாக காட்டு
யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பாலப்பள்ளி எஸ்டேட் ரப்பர் தோட்டத்திற்குள் இன்று காலை 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் நுழைந்தன. இதனால், தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் போனதால் வனக் காவலர்கள் வந்து பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
யானைகள் முகாமிடுவதால் உயிரைப் பணயம் வைத்து தோட்டங்களுக்குச் செல்ல
வேண்டியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வன எல்லையில் பள்ளம்
அல்லது மின் வேலிகள் அமைத்து வனவிலங்குகள் தோட்ட பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.