‘‘வேலையிழப்பு மற்றும் ஹோலிப் பண்டிக்கை காரணமாகவே வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலங்களுக்குச் செல்கின்றனர்…’’
கடந்த சில நாள்களாக உலக அளவில் உற்றுக் கவனிக்கப்படும் நகரமாக திருப்பூர் மாறியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே! திருப்பூர் உள்பட தமிழகத்தில் பல இடங்களில் பீகார் மாநில தொழிலாளர்கள் பணியாற்றிவரும் சூழலில், அவர்கள் தாக்கப்படுவதாகக் கிளப்பிவிடப்பட்ட வதந்தி.பெரும்தீயாகப் பற்றிக் கொண்டுவிட்டது. இதை யடுத்து, ‘திருப்பூரே காலி.ஒட்டுமொத்த தொழிலாளர் களும் பீகாரை நோக்கி புறப்பட்டுவிட்டனர். ரயில் களில் கூட்டம்கூட்டமாக ஏறிப் பயணிக்கும் பீகார் தொழிலாளர்கள்.’ என்று மாற்றி மாற்றி மீடியாக்களில் செய்திகளும் வீடியோக்களும் வட்டமடித்தன.
இந்த நிலையில், உஷாரான தமிழக அரசு, மொத்தமும் வதந்தி என்பதை நிரூபித்ததோடு, விஷமப் பிரசாரம் செய்த ‘ஆன்டி இண்டியன்’கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிலரைக் கைதும் செய்திருக்கிறது.
பதற்றம் குறைந்தாலும், பீகார் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டுச் செல்வது மட்டும் தொடர் கிறது. அதற்குக் காரணம், அந்த வதந்திதானா? அல்லது வேறு ஏதும் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக திருப்பூரில் பலதரப்பிலும் விசாரித்தோம். அதற்குள் நுழையும் முன்பாக… ஒரு முன்கதைச் சுருக்கம்.
1980-ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் வளர்ச்சி பெறத் தொடங்கியது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள் உருவாக்கப் பட்டு, இன்று உள்நாட்டு ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு, நிட்டிங், டையிங், பிரின்டிங் என பல்வேறு வகை ஜாப்வொர்க் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
தொடக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங் களில் இருந்து, குறிப்பாக, தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறினர். 2005-ம் ஆண்டுக்குப் பிறகு பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களி லிருந்தும் வேலை தேடி திருப்பூருக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
குறிப்பாக, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, லட்சக் கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் வரத் தொடங்கினர். இன்றைய தேதிக்கு திருப்பூரில் சுமார் ஆறு லட்சம் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி யும், 30 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, நிலையற்ற நூல் விலை, வங்கதேசம், சீனா போன்ற போட்டி நாடுகளுக்கு ஆர்டர் சென்றது, பொருளாதார மந்தநிலை, கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வந்தது. இதற்கிடையேதான் வதந்தி பரவி பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.
வடமாநிலத் தொழிலாளர்கள் பலரிடமும் நாம் பேசியபோது, ‘‘திருப்பூரில் கடந்த சில மாதங்களாக வேலை இல்லாத சூழல் நிலவுகிறது. அதனால், பின்னலாடை நிறுவனங்களின் விடுதிகளில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்களை பல நிறுவனங்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. வாரத்தில் 2 அல்லது 3 நாள்கள் வேலை மட்டுமே இருப்பதால், சம்பளம் இல்லாமல் எங்களால் சமாளிக்க முடியவில்லை” என்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியனிடம்கேட்டபோது, “உண்மையில் வடமாநிலத்தவர்கள் திருப்பூரில் தாக்கப்படவில்லை. பின்னலாடைத் துறையின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 25% வடமாநிலத் தொழிலாளர்கள். பின்னலாடைத் துறை 70% அடிப்படைத் தொழிலாளர்களை நம்பியே உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலானோர் படித்துவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்று விட்டதால், தொழிலாளர் பற்றாக்குறையை வடமாநிலத் தொழிலாளர்கள்தான் பூர்த்தி செய்கின்றனர். மற்றபடி, தமிழகத் தொழிலாளர்களின் வேலையை வடமாநிலத் தொழிலாளர்கள் பறித்துக் கொண்டார்கள் என்று கூறுவது அபத்தமானது.
ஏற்கெனவே, தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வெளிநாட்டு ஆர்டர்களை குறித்த நேரத்தில் அனுப்ப முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்களும் சென்றுவிட்டால், பின்னலாடை தொழில் பாதிக்கப்படும். இந்த நிலையிலும் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் பணியாற்றிக் கொண்டுதான் உள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இருப்பதற்கு இருப்பிடம் அல்லது தங்கும் வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் (டீமா) முத்துரத்தினத்துடன் பேசியபோது, “வடமாநிலத் தொழிலாளர்கள், தற்போது அதிகமாக ஊருக்குச் செல்ல முக்கிய காரணம், பாதுகாப்பு இல்லை என்பதால் அல்ல. வதந்தி பயம் சில நாள்களுக்கு இருந்தது உண்மைதான். இப்போது அது இல்லை. நூல் விலை ஏற்றம், ஜி.எஸ்.டி போன்றவற்றால் கடந்த ஓராண்டாக புதிய ஆர்டர்கள் எடுப்பது 70% குறைந்துள்ளது. எனவே, வேலையிழப்பு மற்றும் ஹோலி பண்டிகை காரணமாகவே சொந்த மாநிலங்களுக்குச் செல்கின்றனர். புதிய ஆர்டர் கிடைத்து, மீண்டும் வேலை கிடைக்கத் தொடங்கி விட்டால், அவர்கள் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார்கள். இது ஆண்டுதோறும் நடப்பது தான். வடமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்குத் திரும்ப வில்லை எனில், தமிழகத்தின் தொழில் துறை கடுமையாக பாதிப்படை யும் என்கிற நெகட்டிவ்வான எண்ணத்தைப் பலரும் உருவாக்க முயல்கிறார்கள். தமிழக அரசு மிக கவனத்துடன் அணுக வேண்டும். அந்தத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும்” என்று சொன்னார்.
திருப்பூரில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு ஊர் களில் பல்வேறு தொழில்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. நிலைமையைப் புரிந்து கொண்டு, அவர்கள் மீது வன்மம் கக்காமல் இருப்பது தான், திருப்பூர் உள்பட தமிழகத்தின் தொழில்துறை வருமானத்தை தக்க வைக்கும்… தொழில்கள் முடங்காமலும் காப்பாற்றும்!