வடமாநில இளைஞர்களை சிலர் அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை வட இந்திய ஊடகங்கள் சில தமிழகத்தில் வட இந்தியர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளனர்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இந்தி பேசுவதால் அடித்துக் கொல்லப்படுவதாக ஒரு வதந்தி கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பிகார் மாநில பாஜக இதனை மிகப்பெரிய ஆயுதமாக வைத்து தமிழகத்துக்கு எதிரான ஒரு பெரிய சதியை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன தான் நடக்கிறது? உண்மை என்ன?
வடமாநில இளைஞர்களை சிலர் அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை வட இந்திய ஊடகங்கள் சில தமிழகத்தில் வட இந்தியர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்தடுத்து பல வீடியோக்கள் இப்படி வெளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுண்டெழுந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
தொழில் நகரமான திருப்பூரில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் அங்கு இந்தி பேசியதால் அவர்களில் சிலர் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பியுள்ளனர். ஒருசில கட்சியின் பொறுப்புகளில் உள்ள சிலரே இப்படி தேவையற்ற வதந்திகளை பரப்பியது தான் வேதனையின் உச்சம். இந்த வீடியோக்கள் உண்மை இல்லை எனவும், இது போலியாக ஜோடிக்கப்பட்டது எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வதந்தியால் தொழில் பாதிக்கப்படுவதாக புகார் வந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள் .