பானி பூரி வியாபாரம் தொடங்கி கட்டிட வேலை, ஓட்டல், துணிக்கடை என தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என வரவேற்கப்படும் வடக்கன்களால் தான் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது என ஒரு சிலர் பொங்கி எழுகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்க என்ன காரணம்… யார் காரணம்..?
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை நோக்கி வரும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவு. முன்பெல்லாம் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தற்போது தமிழகத்தின் குக் கிராமங்கள் வரை குடிசைபோட்டு வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பொதுவாக முன்பெல்லாம் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு வேலை தேடி வருவார்கள். அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரிவார்கள். ஆனால், தற்போது அந்த நிலையும் மாறி, அவர்களுக்கான வாய்ப்புகளையும் திக்கித் திக்கி இந்தி தமிழ் பேசும் வட மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, “இந்தியை போல நாம் வட மாநிலத்தவரையும் நம்மையும் அறியாமல் திணித்துக் கொள்கிறோம்” என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். பொதுவெளியில், இந்திக்கு எதிராகப் போராடும் அரசியல்வாதிகள், தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் மட்டும் இந்தி இரண்டாம் மொழியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போல, நம்மவர்களின் நடவடிக்கையும் உள்ளது.
தமிழகத்தை நோக்கி வட மாநிலத்தவர்கள் படையெடுப்பதன் பின்னணியிலும் நம்மவர்களே உள்ளனர். வேலைகளுக்காக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து குறைந்த விலைக்கு சந்தையில் விற்கும் ஆடுகள் போல முதலாளிகளிடம் அவர்களை கிட்டத்தட்ட விற்றுவிடுகிறார்கள்.
இப்படி கொத்தடிமை கணக்காய் தள்ளப்படும் வடமாநில தொழிலாளர்களை தொழிலாளர் சட்டங்களை எல்லாம் பற்றி கவலைப்படாமல் நம் முதலாளிகள் கசக்கிக் பிழிகிறார்கள். ஒருசில இடங்களில் 10 மற்றும் 15 மணி நேர வேலைகள் கூட இவர்களின் தலையில் கட்டப்படுகின்றன. இங்கே கிடைக்கும் சம்பளமும் வசதிகளும் தங்கள் மாநிலத்தில் அரிது என்பதால் அவர்களும் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கிறார்கள்.
இதே வேலையை நம்மவர்களுக்குக் கொடுக்கலாமே? என்று கேட்டால், “வடமாநில தொழிலாளர்களைப் போல நம்மவர்கள் உழைத்த காலமெல்லாம் இப்போது மலையேறிப்போச்சு. இப்போதெல்லாம் அவர்கள் டைம் போட்டு வேலை செய்கிறார்கள். ‘இந்த வேலையை ஒழுங்கா முடிக்கல. சரியாப் பாருப்பா’ என்று சாதாரணமாகக்கூட அவர்களைச் சொல்லமுடியவில்லை. அப்படிச் சொன்னால், ’அப்டீன்னா வேற ஆள வெச்சுப் பாத்துக்குங்க’ன்னுட்டு போயிடுறாங்க.
ஆனால், வட மாநில தொழிலாளர்களுக்கு வயிற்றில் பசி. இவர்களை நம்பி சொந்த மாநிலத்தில் குடும்பம் காத்திருக்கிறது. அதனால் அவர்கள் தரப்பட்ட வேலையை நேரம் காலம் பார்க்காமல் சரியாகச் செய்கிறார்கள். ஆனால் நம்மவர்களுக்கு வயிற்றில் பசி இல்லை. அது தெரியாத அளவுக்கு இலவசங்களைக் கொடுத்து அவர்களை சோம்பேறிகளாக்கி விட்டோம்” என்று சொல்கிறார்கள் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பவர்கள்.
வட மாநில தொழிலாளர்கள்:
இன்னும் சிலரோ, “நம்மவர்களிடம் முன்பு இருந்த அர்பணிப்பு இல்லை. வேலையை மீறிய ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள். இத்தனை மணி நேரம் தான் வேலை பார்ப்பேன் என கண்டிஷன் போடுகிறார்கள். ‘இஷ்டம்னா வேலை குடு… இல்லாட்டா ஆளை விடு’ன்னு நிக்கிறாங்க. கிராமங்கள் வரைக்கும் இன்றைக்கும் இதுதான் இன்றைக்கு யதார்த்த நிலை. இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் நம்மவர்கள் வடமாநில தொழிலாளர்களை வரவைக்கிறார்கள்” என்கிறார்கள்.
சாட்டை துரைமுருகன்:
இவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா… நம்மவர்கள் சோம்பேறிகள் ஆகிவிட்டார்களா..? என்ற கேள்வியுடன் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனிடம் பேசினோம். கொந்தளித்துவிட்டார் மனிதர்.
“நம்மவர்களைச் சோம்பேறிகள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கப்பூரில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக அங்கீகாரம் பெறக் காரணம் ரத்தமும் வியர்வையும் சிந்திய நம்முடையவர்களின் உழைப்பு. நம்மவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.
தமிழ்நாட்டை வட மாநிலத்தினர் வேட்டைக்காடாக மாற்றியுள்ளனர். விமானத்தில் வந்து கொள்ளையடித்துச் செல்கின்றனர். விஜய் ஆண்டனி சொல்வது போல வடக்கனும் தெற்கனும் உழைப்பவர்கள் தான்; அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழகத்தைக் கொள்ளைக்காடாகவும், வேட்டையாடாவும் பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும். வாக்கு வங்கி அரசியலுக்காக வடமாநிலத்தவர்களின் வருகையை திமுக அரசும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் இங்கே நான் பதிவுசெய்ய விரும்புகிறேன்” என்று சாடினார் சாட்டை துரைமுருகன்.
அமைச்சர் சி.வெ.கணேசன்வாக்கு அரசியலுக்காக வட மாநிலத்தவரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இது குறித்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசனிடம் பேசினோம். “வாக்கு அரசியலுக்காக வட மாநிலத்தவர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஒருபோதும் திமுக அரசுக்கு இல்லை. தமிழகத்தை நோக்கி வரும் வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மைத்தான். அது குறித்த கணக்கெடுப்புகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலுள்ள வட மாநிலத்தவர்களை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்களால் பிறர் அச்சப்படும் நிலை தமிழகத்தில் இல்லை’’ என்றார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று காலங்காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நமக்கான உரிமைகள் பறிக்கப்படும் என்று தெரிந்திருந்தால் நமக்கு முன்னோர் இப்படிச் சொல்லிவைத்திருக்கமாட்டார்கள். எனவே, நம்மவர்கள் நமக்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் வடக்கு என்ன… வடகிழக்கில் இருப்போர் வந்தாலும் நமக்கான உரிமைகளை யாரும் பறித்துவிட முடியாது.
என்றாலும் வடமாநில தொழிலாளர்கள் கொலை – கொள்ளை என சட்டம் – ஒழுங்கிற்கு சவால்விடும் வேலைகளிலும் ஈடுபடும் செய்திகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. ஆகையால், வந்தேறிகள் விஷயத்தில் அரசு கூடுதல் விழிப்புடன் இருப்பதும் நல்லது தான்!