சென்னை: வட மாநில தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, சென்னையில் ‘ஆவின்’ பால் பாக்கெட் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாள்தோறும் 14 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது. இதற்கான பால் பாக்கெட்டுகள் மாதவரம், அம்பத்துார், சோழிங்கநல்லுார் பால் பண்ணைகளில் தயாரித்து விற்பனைக்கு அனுப்படுகிறது.
பால் பாக்கெட் தயாரிப்பு, அவற்றை வாகனத்தில் ஏற்றும் பணி, ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பீஹார், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை, ஒப்பந்த நிறுவனங்கள் பணியமர்த்தி உள்ளன. பணியில் உள்ள வட மாநில தொழிலாளர்களும் கூடுதல் ஊதியம் கேட்டு வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால், பால் பண்ணைகளில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை, ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபடுத்தின. இவர்கள் கேட்ட ஊதியம் வழங்கவில்லை.
இதனால், உற்பத்தி செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளை வாகனங்களில் ஏற்றும் பணிகள் இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. இப்பிரச்னையால், பாலகங்கள் மற்றும் கடைகளுக்கு குறித்த நேரத்தில் பால் சப்ளை செய்ய முடியவில்லை. இதனால், தென்சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் இரண்டு நாட்களாக நுகர்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் கூறியதாவது:
தொழிலாளர் பிரச்னையால், பால் பண்ணைகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் எடுத்து செல்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. புதிதாக வந்த தெழிலாளர்களால், உடனுக்குடன் பால் டப்பாக்களை வாகனங்களில் ஏற்ற முடியாததே இதற்கு காரணம்.
தற்போது இப்பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல பால் வினியோகம் நடந்து வருகிறது. தட்டுப்பாடு என்ற பேச்சிற்கே இடம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.